Wed. May 13th, 2026

குடியாத்தம், மே 13: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த முகேஷ் (18) என்பவர், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தலையில் கட்டையால் அடிபட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

🔪 சம்பவம் நடந்தது எப்படி?

திருப்பத்தூரைச் சேர்ந்த முகேஷ், தற்போது குடியாத்தம் பகுதியில் வசித்து வந்தார். இவருக்கும், கஸ்பா பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (28) என்பவருக்கும் நெருங்கிய நட்பு இருந்தது. இருவரும் கட்டிட சென்ட்ரிங் (ஃபார்ம்வொர்க்) தொழிலாளர்கள்.
நேற்று இரவு, இருவரும் குடியாத்தம் அஞ்சுமன் ரோடு பகுதியில் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது, இவர்களுக்குள் ஏதோ ஒரு காரணத்தால் வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றி, ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கிக் கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த விஷ்ணு, அருகில் கிடந்த கட்டையை எடுத்து முகேஷ் தலையில் பலமாக அடித்துள்ளார்.

🏥 சிகிச்சை பலனின்றி பலியானார்

படுகாயமடைந்த முகேஷ், குடியாத்தம் பஸ் நிலையம் அருகிலுள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இருப்பினும், இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

👮 போலீஸ் நடவடிக்கை

இச்சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை செய்த விஷ்ணுவை கைது செய்துள்ளனர். முகேஷின் உறவினர்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் போலீஸ் நிலைய வளாகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கஸ்பா பகுதியில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியாளர்: குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS