Thu. Apr 30th, 2026

குடியாத்தம், ஏப். 28:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஆட்டோ நிறுத்தம் தொடர்பான தகராறு, கத்திக்குத்தாக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியாத்தம் அடுத்த செம்பேடு பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (53), ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் சகோதரர்கள் சதீஷ் மற்றும் கிரிபிரசாத் (29) ஆகியோரும் ஆட்டோ டிரைவர்களே.

வெங்கடேசன் மற்றும் சதீஷ் இடையே, ஆட்டோக்களை காலி இடத்தில் நிறுத்துவது தொடர்பாக முன்பிருந்தே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று சதீஷின் தம்பி கிரிபிரசாத், வெங்கடேசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், கிரிபிரசாத் கத்தியால் வெங்கடேசனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் வெங்கடேசன் தலை உள்ளிட்ட பல இடங்களில் கடுமையாக காயமடைந்து, ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

அவரை அருகில் இருந்த உறவினர்கள் உடனடியாக மீட்டு, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரின் நிலை குறித்து மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளி கிரிபிரசாத்தை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS