Thu. Apr 30th, 2026

ஏப்ரல் 28 – வேலூர்

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் வட்டத்திற்கு உட்பட்ட கீழ் ஆலத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற கெங்கையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை மாத சிரசு திருவிழா இந்த ஆண்டு வெகு சிறப்பாக நடைபெற்றது.

சித்திரை மாதம் 15ஆம் தேதியை முன்னிட்டு நடைபெறும் இந்த திருவிழா, அப்பகுதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் முதல் கெங்கையம்மன் திருவிழா என்பதால், குடியாத்தம், கே.வி.குப்பம், காட்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாகிய “சிரசு ஊர்வலம்” பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் பாரம்பரிய தாரை தப்பட்டை, மேளதாளங்கள் முழங்க, சிலம்பாட்டம் மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று விழாவிற்கு சிறப்பு சேர்த்தன.

மேலும், பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி, கற்பூரம் காட்டி, சூறைத்தேங்காய் உடைத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். சிரசு ஊர்வலத்தின் போது நூற்றுக்கணக்கான ஆடுகள் மற்றும் கோழிகளை பலியிட்டு, பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

இந்த திருவிழா ஆன்மீக உற்சாகத்தையும், கிராமிய பாரம்பரிய கலாச்சாரத்தின் சிறப்பையும் வெளிப்படுத்தும் வகையில் மிகுந்த விமரிசையாக நடைபெற்றது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS