Sun. Apr 26th, 2026

குடியாத்தம் | ஏப்ரல் 25

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் குழந்தை கடத்த முயற்சி செய்ததாக ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் ஒருவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரின் ஒன்றரை வயது பெண் குழந்தை, உடல்நலக்குறைவு காரணமாக இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது.

அதே வார்டில் பள்ளிகொண்டா பகுதியை சேர்ந்த நியாஸ் (35) என்பவர் உடல்நிலை பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இன்று காலை நியாஸ் குழந்தையை தூக்கிக்கொண்டு செல்வதாக அருகிலிருந்தவர்கள் சந்தேகித்தனர். இதையடுத்து, குழந்தை கடத்த முயற்சி என எண்ணிய பொதுமக்கள் அவரை பிடித்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், நியாஸ் வலிப்பு நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தபோது அருகில் இருந்த குழந்தையை தூக்கி கொஞ்சியதாகவும், அதை தவறாக புரிந்துகொண்ட பொதுமக்கள் அவரை பிடித்து ஒப்படைத்ததாகவும் தெரியவந்தது.

மேலும், குழந்தையின் தந்தை ரமேஷ் இதுகுறித்து எந்தவித புகாரும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தை கடத்தல் என்ற தகவல் பரவியதால், குடியாத்தம் பகுதியில் சில நேரம் பரபரப்பு நிலவியது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்

கே. வி. இராஜேந்திரன்.

By TN NEWS