Mon. Apr 20th, 2026

குடியாத்தம், ஏப்ரல் 19:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில், அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா கலந்து கொண்டு, குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் தபிதாள் அவர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

இந்த கூட்டத்தில் பா.ம.க. சார்பில் ராமதாஸ் தலைமையிலான நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் அப்பு, பாலாஜி, கருப்பு செல்வம், சூலை மணி சந்தோஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய சசிகலா, 2006ஆம் ஆண்டு ஜெயலலிதா அறிவித்த “தாலிக்கு தங்கம்” திட்டத்தை நினைவுகூர்ந்தார். “அந்த திட்டம் பெண்களின் சமூக பாதுகாப்பை வலுப்படுத்தியது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இதுபோன்ற மக்கள் நலத் திட்டங்கள் கொண்டு வரப்படும்” என கூறினார்.

மேலும், விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த அவர், “இத்தகைய விபத்துகள் மீண்டும் நடைபெறாத வகையில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம்” என வலியுறுத்தினார்.

குடியாத்தம் தொகுதி வளர்ச்சிக்கான வாக்குறுதிகளாக,

கைத்தறி பூங்கா அமைத்தல்,

பத்தலபள்ளி அணை கட்டும் திட்டம் விரைவுபடுத்தல்,

அரசு மகளிர் கல்லூரி தொடங்குதல்

போன்ற திட்டங்களை செயல்படுத்த உறுதியளித்தார்.

“நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கூறும் அரசியல் கட்சிகளுக்கு மாறாக, எங்களால் நடைமுறைப்படுத்தக்கூடிய திட்டங்களையே முன்வைக்கிறோம்” என அவர் குறிப்பிட்டார்.

இறுதியாக, வருகிற 23-04-2026 அன்று நடைபெறும் தேர்தலில் “தென்னந்தோப்பு” சின்னத்திற்கு வாக்களித்து தபிதாள் அவர்களை வெற்றி பெறச் செய்யுமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS