Fri. Apr 10th, 2026

தென்காசி, ஏப். 9:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பனை தொழிலாளி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆலங்குளம் வட்டாரத்திலுள்ள மருதம்புத்தூர், கண்டபட்டி, காத்தபுரம், நாலாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் பனை தொழிலாளர்கள் பனைமரங்களில் இருந்து பதநீர் இறக்கி விற்பனை செய்வது வழக்கம். இதில் சிலர் சட்டவிரோதமாக கள் தயாரித்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா சாதாரண உடையில் சோதனை மேற்கொண்டார். அப்போது பெருமாள் சேட் என்பவரின் மகன் மணிகண்டன் (35) வீட்டில் சோதனை நடத்தப்பட்டபோதும், எவ்வித சட்டவிரோத பொருளும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, மணிகண்டன் பணிபுரியும் பனைமரத்தில் சோதனை நடத்துமாறு போலீசார் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், மணிகண்டன் அருகில் இருந்த பனைமட்டையால் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட பதற்றத்தில், சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா தற்காப்புக்காக தன் துப்பாக்கியால் மணிகண்டனை நோக்கி சுட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

தகவல் அறிந்து ஆய்வாளர் ஆடிவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்த இருவரையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இந்த சம்பவத்தை கண்டித்து பனை தொழிலாளியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மூன்று போலீசார் மீது ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மாவட்ட செய்தியாளர்: அமல்ராஜ், தென்காசி

By TN NEWS