Sun. Apr 5th, 2026

செஞ்சி, ஏப்ரல் 3, 2026

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் செஞ்சி சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொது பார்வையாளர் பெறசா ஹோப் டங்கடே (070) தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

செஞ்சி தொகுதிக்குட்பட்ட மேல்மலையனூர் வட்டத்தில் உள்ள பாகம் எண் 26 – வடவெட்டி கிராமம் சார்ந்த வாக்காளர்கள், தங்களது வாக்குச்சாவடி தற்போது சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கீழ் சேவலாம்பாடி பகுதியில் அமைந்துள்ளதாகவும், அதனை தங்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகில் மாற்றி அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த கோரிக்கையை தொடர்ந்து, தேர்தல் பொது பார்வையாளர் பெறசா ஹோப் டங்கடே அவர்கள் 02.04.2026 அன்று நேரடியாக சம்பந்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். அதன் தொடர்ச்சியாக, 03.04.2026 அன்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில், வாக்குச்சாவடி மாற்றம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் A.N. தமிழரசன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் செஞ்சி வட்டாட்சியர் த. கார்த்திகேயன், மேல்மலையனூர் வட்டாட்சியர் ப. வேலு, தேர்தல் துணை வட்டாட்சியர் R. உமா மகேஸ்வரி, தேர்தல் உதவியாளர் செல்வம், வருவாய் ஆய்வாளர் R. சாமிவேல், கிராம நிர்வாக அலுவலர் (VAO) பாலாஜி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வடவெட்டி கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, வாக்குச்சாவடி நிலையத்தை மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வாக்குச்சாவடி இடமாற்றம் குறித்த முன்மொழிவு உடனடியாக மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்பப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

✍️ செய்தியாளர்:
சக்திவேல் விஜயன்
விழுப்புரம் மாவட்ட கிரைம் செய்தியாளர்


By TN NEWS