Tue. Dec 16th, 2025

புதுக்கோட்டை, டிசம்பர் 14 :

புதுக்கோட்டை மாவட்டம், நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல ராஜா வீதி பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக, பூமிக்கடியில் புதைக்கப்பட்டிருந்த பிஎஸ்என்எல் கேபிள் காப்பர் வயர்களை திருட முயன்ற கும்பலை நகர காவல் நிலைய போலீசார் நேற்று 13.12.2025 அன்று கைது செய்தனர்.

பிஎஸ்என்எல் பணியாளர்கள் போல் வேடமணிந்து, கேபிள் பழுது பார்ப்பது போல் குழி தோண்டி, அதிலிருந்து காப்பர் வயர்களை திருடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து, நகர காவல் நிலைய ஆய்வாளர் கோ. சுகுமாரன் தலைமையில், உதவி ஆய்வாளர் காமராஜ் மற்றும் காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு குழி தோண்டி கேபிள் திருட முயற்சியில் ஈடுபட்டிருந்த
தர்மபுரி மாவட்டம், இராமியம்பட்டி கிராமத்தை சேர்ந்த

பிரகாசம் மகன் சூர்யா,

காத்தவராயன் மகன் செல்லதுரை,

குப்புசாமி மகன் மணிகண்டன்,

பிரகாஷ் மகன் மகேந்திரன்,

சேட்டு மகன் மணிகண்டன்,

வெங்கடேசன் மகன் சின்னதுரை
என ஆறு பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில், குற்றவாளிகள் அனைவரும் தர்மபுரி மாவட்டத்திலிருந்து ஒயிட் பொலிரோ வாகனத்தில் வந்து, மாதத்திற்கு ஒரு மாவட்டம் என திட்டமிட்டு, தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பிஎஸ்என்எல் கேபிள் காப்பர் வயர் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் மீது நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து கேபிள் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கருவிகள் மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, இவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள பிற மாவட்ட திருட்டு சம்பவங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

செய்தி :
M. மூர்த்தி
மாவட்ட தலைமை செய்தியாளர்,
புதுக்கோட்டை மாவட்டம்

By TN NEWS