“பூச்சிகளுடன் போராடுவதா? ஆட்சியாளர்களுடன் போராடுவதா?”
உயிர் கொடுத்த பூமி இது!
உழைப்பைக் கொட்டிக், கண்ணீரை நீராய்ப் பாய்ச்சி, நம்பிக்கையை மட்டுமே மூலதனமாய் வைத்து வளர்த்த பயிர்கள் இன்று கண் முன்னே கருகிக் கிடக்கின்றன.
வானம் பொய்த்துவிட்டது.
ஆற்றில் தண்ணீர் இல்லை.
நிலத்தடி நீரை எடுக்கவும் தடைகள்.
விவசாயம் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது என்று யாருக்குத் தெரியும்?
கடன் சுமை கழுத்தை நெருக்குகிறது.
ஒருபக்கம் பூச்சிகள், களைகள், இயற்கை சீற்றங்கள், மறுபக்கம் விளைச்சலுக்குரிய விலை கிடைக்காத அவலம்!
அரசு அறிவிக்கும் சலுகைகள் ஏட்டளவிலே நின்றுவிடும்.
விவசாயி என்றால் நாட்டின் முதுகெலும்பு என்று சொல்வார்கள். ஆனால் இன்று அந்த முதுகெலும்பு முறிந்து கிடக்கிறது.
அறுவடைக்குக் காத்திருந்தபோது வந்த மழையால் நஷ்டம்.
அதிகாரிகளிடம் கையேந்தி நின்றால் ‘வறட்சி நிவாரணம்’ எனும் பெயரில் பெயரளவில் ஒரு தொகை — அது என் உழைப்புக்கு ஈடாகுமா?
என் வயலில் நான் ராஜா.
ஆனால் இந்த உலகில் நான் பிச்சைக்காரன் போல நிற்க வேண்டியிருக்கிறது.
பூச்சிகளுடனான போராட்டத்தை விட கொடியது — வாழ்வாதாரத்திற்கான போராட்டம்.
உணவளிக்கும் உழவன் தெருவில் நிற்கிறான்.
ஆட்சியாளர்களின் கவனம் திசை மாறுகிறது.
நீதிக்காகப் போராடுவது ஒரு புறம் இருக்க, அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது என்ற கேள்விதான் நெஞ்சில் எரிகிறது.
“போதும்!”
என் வலி கேட்க ஆட்சியாளர்கள் தயாராக வேண்டும்.
பூச்சிகளுடனான போராட்டத்தை மட்டுமே என்னிடம் விட்டுவிட்டு, என் வாழ்வாதாரத்திற்கான போராட்டத்தில் நீங்கள் துணை நிற்க வேண்டும்.
✍️ விருதை சங்கர் – விவசாயி கோரிக்கை
பதிவு: சேக் முகைதீன்.
