வேலூர் மாவட்டம், அக்டோபர் 23.
குடியாத்தம் ஒன்றியத்திற்குட்பட்ட கொண்ட சமுத்திரம் ஊராட்சி கிருஷ்ணா கார்டன், லெனின் நகர், வள்ளலார் நகர் மற்றும் சக்தி நகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மழைநீர் தேங்கி, நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மழைநீர் செல்ல வழியில்லாமல், முழு குடியிருப்பு பகுதி குளம் போல் காட்சி அளிக்கிறது. நீர் தேங்கியுள்ளதால் பச்சை பாசி படர்ந்து, கொசுக்கள் பெருகி, சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசி, அத்தியாவசிய தேவைகளுக்கே கூட மக்கள் வெளியே வர முடியாத நிலை உருவாகியுள்ளது.
இந்த பிரச்சினையைத் தீர்க்க பொதுமக்கள் கடந்த 16ஆம் தேதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். இருந்தாலும் இதுவரை எந்த உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டினர்.
மழைநீர் வெளியேறுவதற்கான முறையான கால்வாய் அமைப்பு இல்லாததே இக்கேட்டுக்குக் காரணம் எனக் கூறும் பொதுமக்கள், “போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ள நீரை அகற்ற வேண்டும். அதோடு, புதிய கால்வாய்களை தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக செல்லும் முக்கிய கால்வாயுடன் இணைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்: கே. வி. ராஜேந்திரன், குடியாத்தம்
