🔱 சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு — பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு.

பாத்திமை / திருவனந்தபுரம், அக்டோபர் 22:
கேரளா மாநிலத்தில் நான்கு நாட்கள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணத்தில் உள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, இன்று (அக்டோபர் 22) காலை சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதன் மூலம் சபரிமலை கோயிலை தரிசித்த முதல் இந்திய குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு வரலாறு படைத்துள்ளார்.
நேற்று மாலை 6.20 மணியளவில் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் திருவனந்தபுரம் வந்த குடியரசுத் தலைவரை, கேரளா மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர் மற்றும் முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட உயரதிகாரிகள் விமான நிலையத்தில் உற்சாகமாக வரவேற்றனர்.
பின்னர் கவர்னர் மாளிகையில் இரவு தங்கி இருந்த திரவுபதி முர்மு, இன்று காலை 9.35 மணியளவில் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சபரிமலைக்கு புறப்பட்டார்.
அவர் நிலக்கல்லில் இறங்கியதும், அங்கிருந்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் காரில் பம்பை நோக்கி பயணம் செய்தார். பம்பை கணபதி கோயிலில் வழிபட்டு, வழக்கம்போல் இருமுடி கட்டி, 11 மணியளவில் ஜீப்பில் சன்னிதானம் நோக்கி புறப்பட்டார்.
சன்னிதானம் சென்றடைந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிற்கு, சபரிமலை ஐயப்பன் கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் 18ம் படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்தார்.
அவருடன் மெய்க்காவலர் குழுவினரும் இருமுடி கட்டி தரிசனம் செய்தனர். அப்போது மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி, குடியரசுத் தலைவரிடமிருந்து இருமுடியை பெற்றுக் கொண்டு வழிபாடு செய்தார்.
இச்சம்பவம் சபரிமலை பக்தர்களிடையே பெரும் உற்சாகத்தையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது.
🛑 சிறப்பு தகவல்:
இந்த தரிசனத்தின் மூலம் சபரிமலை கோயிலில் பெண்கள் தரிசனம் குறித்து நிலவி வந்த விவாதங்களுக்கு மதிப்பான அடையாளமாக திரவுபதி முர்முவின் பயணம் குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு: சேக் முகைதீன்.
