மதுரை மாவட்டம் எழுமலை அரசு மேல்நிலைப்பள்ளியின் முதுகலை பொருளியல் ஆசிரியர் முருகேசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி பொருளியல் பிரிவு மாணவர்கள், உலக தொல்குடி தினத்தை முன்னிட்டு அழகம்மாள்புரம் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினர் மக்களின் சமூக–பொருளாதார நிலையை கள ஆய்வு செய்தனர்.
அப்போது அப்பகுதி பழங்குடியினர் “தற்போது எங்களுக்கு உடைகள் மிக அவசியமான தேவையாக உள்ளது” என தெரிவித்தனர். இதையடுத்து ஆசிரியர் முருகேசன் அவர்கள் குயாஸ் தொண்டு நிறுவனம் சார்பில் தீபாவளியை முன்னிட்டு இம்மக்களுக்கு புத்தாடை வழங்குமாறு கோரிக்கை வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, இன்று அந்தத் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் சந்திரலேகா அவர்கள் பழங்குடியினர் குடும்பங்களுக்கு புத்தாடைகளும் இனிப்புகளும் வழங்கினார்.
பின்னர் பேசிய சந்திரலேகா அவர்கள்,
“ஆசிரியர் முருகேசன் அவர்களின் வேண்டுகோளின்படி இம்மக்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறோம். வருங்காலங்களில் அரசுடன் இணைந்து இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,” என தெரிவித்தார்.
வீர சேகர்
செய்தியாளர்
