Sun. Oct 5th, 2025

தமிழ்நாட்டின் புதிய டிஜிபிக்கான 3 பேர் பட்டியல் : 26 ம் தேதி டெல்லியில் முடிவெடுக்கப்படுகிறது*

ஒரு மாத காலத்தில் முடிவுக்கு வருகிறதா பொறுப்பு டிஜிபி பதவி ?!*

*3 பேரைத் தேர்ந்தெடுக்கும் யூபிஎஸ்சி உயர் மட்டக் குழுவில் தமிழ்நாடு டிஜிபி இடம்பெறவில்லை*

தமிழ்நாடு அரசுக்குப் பின்னடைவு ?

*தமிழ்நாட்டின் புதிய காவல்துறை இயக்குநரைத் (டிஜிபி) தேர்ந்தெடுப்பதற்கான ஒன்றியப் பணியாளர் தேர்வாணையத்தின் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம் செப்டம்பர் 26 ஆம் தேதி டெல்லியில் கூடுகிறது.*

*தமிழ்நாட்டின் காவல் துறையின் இயக்குநராகப் பொறுப்பு வகித்து வந்த சங்கர் ஜிவால் ஐபிஎஸ் பணிக் காலம் கடந்த ஆகஸ்ட் 31 ம் தேதியுடன் நிறைவடைந்தது.*

*அடுத்த இயக்குநரைத் தேர்ந்தெடுக்க பணி மூப்பு அடிப்படையிலான அதிகாரிகளின் பட்டியலை இந்திய ஒன்றியப் பணியாளர் தேர்வாணையத்துக்கு தமிழ்நாடு அரசு மூன்று மாதங்களுக்கு முன்பே அனுப்பியிருக்க வேண்டும்.*

*ஆனால் ஆகஸ்ட் மாத இறுதி வாக்கில்தான் பட்டியல் அனுப்பப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.*

*இதற்கிடையில் வெங்கட்ராமன் ஐபிஎஸ் பெறுப்பு டிஜிபியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்தார்.*

*முன்னதாக, காவல் துறை இயக்குநரின் நியமனம் உச்ச நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டும் என்றும் பொறுப்பு டிஜிபி நியமிக்கப்படக் கூடாது என்றும் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞர் யாசர் அராபத் மனு தாக்கல் செய்திருந்தார்.*

*மனு மீதான விசாரணை நடத்திய நீதிபதிகள் உச்ச நீதிமன்ற உத்தரவின்படிதான் நியமனம் இருக்க வேண்டும் என்றும் அவ்வாறு நடக்கவில்லையெனில், மனுதாரர் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் உத்தரவிட்டனர்.*

*இதையும் கடந்து, பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டதால் இந்த நியமனத்தை எதிர்த்து மக்கள் கண்காணிப்பக அமைப்பின் தலைவரும், வழக்கறிஞருமான ஹென்றி டிஃபேன் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்*.

*மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “தமிழ்நாடு அரசு அனுப்பியுள்ள அதிகாரிகளின் பட்டியலை யூபிஎஸ்சி மிக விரைவாகப் பரிசீலித்து 3 பேர் பட்டியலை இறுதி செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டது.*

*இதையடுத்து, யூபிஎஸ்சியின் உயர் மட்டத் தேர்வுக் குழு வரும் 26 ம் தேதி டெல்லியில் கூடுகிறது.*

*இந்தக் குழுவில், யூபிஎஸ்சி தலைவர், இந்திய ஒன்றிய உள்துறை செயலாளர், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்படவுள்ள தமிழ்நாடு  பணி நிலைப் பிரிவைச் சேராத, ஒன்றிய ஆயுதப்படை தலைமை அதிகாரி தரத்தில் உள்ள ஒரு அதிகாரி ஆகியோர் இடம் பெறுகின்றனர்.*

*வழக்கமாக இந்த உள்துறை அமைச்சக நியமன அதிகாரிக்குப் பதிலாக தமிழ்நாடு டிஜிபி இடம் பெறுவார்.*

*ஆனால், தற்போது பொறுப்பு டிஜிபியாக உள்ள வெங்கட்ராமன் ஐபிஎஸ் பெயரும் யூபிஎஸ்சிக்கு அனுப்பிய அதிகாரிகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளதால் அவர் தேர்வாணைய உயர்மட்டக் குழுவில் சேர்க்கப்படவில்லை*.

*ஆக, இந்தக் குழுவில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மட்டுமே தமிழ்நாடு அரசுக்கு சாதகமாக இருப்பார்.*

*இதே பட்டியலை மூன்று மாதங்களுக்கு முன் தமிழ்நாடு அரசு அனுப்பியிருந்தால் முன்னாள் டிஜிபி சங்கர் ஜிவால் இக்குழுவில் இடம் பெற்றிருப்பார்.*

*எனவே, இதுவும் தமிழ்நாடு அரசுக்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப் படுகிறது.*

*பணி மூப்பு அடிப்படையில் தற்போது 1990 முதல் 94 ம் ஆண்டு வரையிலான தகுதி படைத்தவர்கள் பட்டியலில் சீமா அகர்வால், ராஜிவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், ஆகிய மூன்று அதிகாரிகள்தான் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.*

*அடுத்ததாக, கே. வன்னியப் பெருமாள், மகேஷ் குமார் அகர்வால், ஜி. வெங்கட்ராமன், வினித் தேவ் வாங்கடே  மற்றும் சஞ்சய் மாத்துர் உள்ளனர்.*

*பிரமோத் குமார், அபய்குமார் சிங் ஆகியோர் ஓய்வு பெற ஆறு மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ளதால் அவர்கள் போட்டியில் இடம் பெற இயலாத நிலை.*

*இப்படிப்பட்ட நிலையில் யூபிஎஸ்சி குழுவினர் முதல் மூன்று பேரைத் தேர்வு செய்தால் ஆறாவதாக உள்ளவரும், தற்போதைய பொறுப்பு டிஜிபியுமான வெங்கட்ராமன் டிஜிபியாக நியமிக்கப்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.*

*காவல் துறை இயக்குநரின் நியமனத்தில் இத்தனை குளறுபடிகளுக்கும் காரணம் சில உயர் அதிகாரிகளின் தவறான வழிகாட்டல்தான் என்ற பேச்சு கோட்டை வட்டாரத்தில் பலமாக அடிபடுகிறது.*


ஜெ  .அமல்ராஜ் – மாவட்ட தலைமை நிருபர்.  

தென்காசி மாவட்டம்.

By TN NEWS