குடியாத்தம் அருகே மின்கம்பம் சாய்ந்து 5 வயது சிறுமி பலி – அலறிய பொதுமக்கள்; அலட்சியத்திற்கு கண்டனம்:
🎈வேலூர் மாவட்டம், குடியாத்தம், ஆகஸ்ட் 28:
குடியாத்தம் அடுத்த நத்தமேடு கிராமத்தில் நேற்று மின்கம்பம் சாய்ந்து விழுந்ததில் 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே துயரத்தையும், அதே சமயம் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த கிராமத்தை சேர்ந்த குமரன் – ஜானகி தம்பதியரின் மூன்றாவது மகள் நவியா (5), அப்பகுதியிலுள்ள அரசு பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மதியம், அவரது வீட்டின் அருகில் தொழிலாளர்கள் ஒரு தென்னை மரத்தை வெட்டிய போது அது சாய்ந்து அருகிலிருந்த மின்கம்பத்தின் மீது விழுந்தது.
இதனால் மின்கம்பம் சாய்ந்து தரையில் விழ, அதிலிருந்து மின்கம்பிகள் கீழே விழுந்தன. அப்போது அங்கிருந்த சிறுமி நவியா மீது மின்கம்பி படிந்து, கடும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர்.
📌சம்பவ இடத்தில் இருந்த தெரு நாய் ஒன்றும் மின்சாரம் தாக்கி பலியானது.
சம்பவ இடத்துக்கு குடியாத்தம் டவுன் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு வழக்கு பதிவு செய்தனர். மின்துறை ஊழியர்கள் மின்கம்பங்களை அப்புறப்படுத்தினர். மேலும் வருவாய்த்துறை அதிகாரிகளும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📌பொதுமக்கள் கோபம்:
இந்தச் சம்பவத்தால் கிராம மக்கள் அதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ளனர். “மின்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சீராக பராமரிப்பு செய்திருந்தால் இப்படிப் பட்ட விபத்து நடந்திருக்கும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ஏற்கனவே பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து அபாய நிலையில் உள்ளன என்றும், பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மக்கள் குற்றம் சாட்டினர்.
🎈உயிரிழந்த சிறுமியின் பெற்றோரின் துயரம்:
தங்கள் குழந்தை ஒரு கணத்தில் மின்சார விபத்தில் பலியானது நம்ப முடியாத நிலை என்று பெற்றோர் அழுகை மல்கக் கூறினர். சிறுமி நவியாவுக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர். குடும்பத்தில் நிலவும் துயர நிலை கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
📌அரசு தலையீடு வேண்டி பொதுமக்கள் கோரிக்கை:
“விபத்தில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் இப்படிப்பட்ட விபத்துகள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மின்துறை அதிகாரிகள் கடுமையாக கண்காணிக்க வேண்டும்” என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்