Tue. Oct 7th, 2025



*சந்திரமோகன்*

ஒரு விநாயகர் ஒன்றரை லட்சம் விநாயகர் ஆனார்!

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ள பின்வரும் கருத்து கவனிக்க தக்கதாகும். “1983 ல், சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு அடியில் ஒரு விநாயகரை வைத்து தொடங்கிய விநாயகர் சதுர்த்தி … இன்று தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் இடங்களில் … விஸ்வரூப விழாவாக நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவில் ஒரு கருத்தை மக்களிடம் கொண்டு செல்லும் இந்து முன்னணி, இந்த ஆண்டு ‘நம்ம சாமி, நம்ம கோயில், நாமே பாதுகாப்போம் ‘ என்ற கருத்தினை வலியுறுத்துகிறது.”

நம்ம தமிழர் சாமியா விநாயகர்?

‘வணிகர்களின் கடவுளாக தமிழ்நாட்டுக்கு விநாயகர் கொண்டு வரப்பட்டார்’ என்கிறார், வரலாற்று – பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் அவர்கள். அவரது கருத்தை சற்று விரிவாக பார்ப்போம்!  

              விநாயகர் வழிபாடு :

பிள்ளையார், விநாயகர்,கரிமுகன், ஆனைமுகன், கணபதி என்று பல்வேறு பெயர்களால் அறியப்படும் கடவுளே இன்று தமிழ்நாட்டில் மிகப் பரவலாக வணங்கப்பெறும் கடவுள்.

ஆனை முகமுடைய இந்தக் கடவுள் கி.பி. ஆறாம் நூற்றாண்டளவில் தமிழ்நாட்டிற்கு அறிமுகமாகி உள்ளார். எனவே அதற்கு முன் பிறந்த சங்க இலக்கியங்களில் இக்கடவுளைப் பற்றிய குறிப்புகள் இல்லை.

எல்லாக் கடவுளருக்கும் முன்னதாக வணங்கப்பெறும் கடவுள் என்பதே இவரது சிறப்பு. பலசரக்குக் கடையில் சீட்டு எழுதுபவர் கூட ஓ என்ற குறியீட்டைப் பிள்ளையார் வணக்கமாக இட்டுத்தான் தொடங்குகிறார். திருமண அழைப்பு, தேர்வுத் தாள் என எல்லா எழுத்து உருக்களும் இக்குறியீட்டை இட்டே தொடங்குகின்றன. மிக அண்மைக்காலமாய், படித்த, நகர்ப்புறம் சார்ந்த பிராமணர் அல்லாதவர்களிடமும்கூட ‘கணபதி ஹோமம்’ என்ற சொல்லும் சடங்கும் மேல்தட்டு மனப்பான்மையின் வெளிப்பாடாகக் காணப்படுகின்றன.

விநாயகர் வழிபாடு மராட்டியத்தின் தென் பகுதியில் புனா நகரைச் சார்ந்த சித்பவனப் பிராமணர்கள் இடையே தோன்றியது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பின்னர் கீழைச்சாளுக்கியருடைய வாதாபி நகரத்தில் நிலைகொண்டு அங்கிருந்து தமிழ் நாட்டிற்குள் பரவி வளர்ந்தது என்றும் கூறுவர்.

தேவாரத்தில் இக்கடவுள் ‘கணபதி’ என்ற பெயராலேயே குறிக்கப் பெறுகிறார். ‘கலமலக்கிட்டுத் திரியும் கணபதி என்னும் களிறும்’ என்பது அப்பர் தேவாரம்.

‘உமையவள் பிடி(பெண் யானை) ஆக, சிவபெருமான் கரி(ஆண் யானை) வடிவெடுத்து, கணபதி அருளினன்’ என்று பாடுகிறார் ஞானசம்பந்தர்.

முற்காலப் பாண்டியர் குடைவரை,கட்டடக் கோயில்களில் கணபதி பரிவார தெய்வமாக சேட்டை (மூ)தேவியுடன் இடம்பெற்றுள்ளார்.

முதலாம் இராசராசன் எடுப்பித்த தஞ்சைப் பெருங்கோயிலில் பரிவாரத் தேவதைகளில் ஒன்றாகக் கணபதியும் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

பரிவார ஆலயத்துப் பிள்ளையார் கணவதியார்’  எனக் கல்வெட்டு இவரைக் குறிக்கிறது. இவருக்கு வாழைப் பழம் படையலாகப் படைக்கப்பெற்றதும் அக்கல்வெட்டால் தெரியவருகிறது.

காலத்தால் முந்திய பிள்ளையார் உருவமாகத் தமிழ்நாட்டில் அறியப் பெறுவது காரைக்குடிக்கு அடுத்த பிள்ளையார்பட்டியில் உள்ள பிள்ளையார் சிலையாகும். ஒரு சிறிய பாறைக் குன்றில் அமைக்கப்பட்டுள்ள குடைவரைக் கோயிலில் புடைப்புச் சிற்பமாக இது விளங்குகிறது.

மனித சாயலை விட யானையின் சாயலே இச்சிலையில் மிகுதியாகத் தோற்றமளிக்கிறது. இதன் காலத்தைக் கி.பி.ஆறாம் நூற்றாண்டு என அறிஞர்கள் கணித்து உள்ளனர்.

இப்பொழுது கற்பக விநாயகர் என  வழங்கப்பெறும் இவ்விநாயகரின் பழைய பெயர் ‘தேசி விநாயகர்’ என்பதாகும்.

தமிழ்நாட்டில் பிள்ளையாருக்கு வழங்கும் பல பெயர்களில் குறிப்பிடத்தகுந்தவை தேசி விநாயகர், தேசிக விநாயகர், தாவள விநாயகர் என்பன. தேசி, தேசிகர் என்ற தமிழ்ச் சொற்கள் வியாபாரிகளைக் குறிப்பனவாம். தேசங்கள் பலவற்றிற்கும் செல்வதால் வியாபாரிகள் ‘தேசிகள்’ எனப்பட்டனர் போலும். நானா தேசிகள் என்பது தென்னிந்தியாவில் இருந்த மிகப் பெரிய வணிகக் குழுவின் பெயர்.

பிள்ளையார்பட்டித் திருக்கோயில் இன்றளவும் பழமை வாய்ந்த வனிகச் சாதியான ‘நரகத்தார்’ எனப்படும் நாட்டுக்கோட்டைச் செட்டியாருக்கே உரியது. செட்டிநாட்டு ஊர்களில் ஒன்றான பொன்னமராவதிக்கு அருகில் சுந்தரம் என்னும் ஊரை அவ்வூர்க் கல்வெட்டு ‘தென் கோனாட்டு ஒல்லையூர்க் கூற்றத்து சுந்தரசோழபுரமான தேசியுகந்த பட்டணம்’ என்றே குறிக்கிறது. மற்றும் சில கல்வெட்டுக்கள் இவ்வூரை ‘நகரம்’ என்றே குறிக்கின்றன.

அக்காலத்தில் நகரம் என்ற சொல் வணிகர்களின் குடியிருப்பைச் சுட்டும்.
எனவே நகரத்தாரால் வழிபடப்பட்ட நானா தேசி விநாயகர் தேசி விநாயகர் எனப்பட்டார்.தேசி எனும் சொல் பிற்காலத்தில் வனிகர்களைக் குறிக்க தேசிகர் என வழங்கப்பட்டது.

முகமதுநபி வியாபாரம் செய்து வந்தார் என்பதைக் குறிக்கும் உமறுப்புலவர் சீறாப்புராணத்தில் அவரைத் தேசிகர் எனக் குறிப்பிடுகிறார். தேசிகர் எனும் சொல் 13ஆம் நூற்றாண்டுக்குப் பின் சைவ, வைணவ சமயங்களில் சுப்பிரமணிய தேசிகர், வேதாந்த தேசிகர் எனச் சமயக் குருமார்களைக் (ஆச்சாரியர்களை) குறிப்பதாகவும் வழங்கியது.

தேசிக விநாயகம் என்பது கவிமணியின் இயற்பெயர். தாவளம் என்பது பெருவழிகளில் இருந்த வாணிகச் சத்திரங்களைக்  குறிக்கும். “தாவளத்திலிருந்து தன்மம் வளர்த்த செட்டியும் செட்டிவீரப்புத்திரர்களும்” என்று பிரன்மலைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

ஆவணி மாதம் வளர்பிறை நாலாம் நாள்( சுக்ல பட்ச சதுர்த்தி) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. புனா, பம்பாய் ஆகிய மேற்கு இந்திய நகரங்களில் தான் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் இவ்விழாவை அனைத்துச் சாதியினரும் கொண்டாடினாலும் மிகுந்த ஈடுபாட்டோடு கொண்டாடுபவர்கள் ‘செட்டியார்’ எனப்படும் பல்வகைப்பட்ட வியாபாரச் சாதியினைச் சார்ந்த மக்களே.

வியாபாரம் செய்த சாதியினர் மூலமே விநாயகர் வழிபாடு தமிழ்நாட்டில் பரவியிருத்தல் வேண்டும். இக்கடவுள் தாவளம் எனப்படும் நெடுவழியில் அமைந்த  சத்திரங்களில் வழிபடப்பட்டவராக இருக்கிறார். எனவே தாவள விநாயகர் என்ற பெயரை இக்கடவுள் பெற்று இருக்கிறார்.

வியாபார ‘கணங்களுக்கு’ வேண்டியவர் என்னும் பொருளிலேயே இவருக்குக் கணபதி என்ற பெயர் வந்திருக்க வேண்டும். தஞ்சைப் பெரிய கோயிலில் இப்பிள்ளையாருக்கு நாள்தோறும் 150 வாழைப்பழங்கள் நிவேதனம் செய்ய அரசன் 360 காசுகளை ஒதுக்கியுள்ளான்.

இக்காசுகளைப் பெற்றுக்கொண்டு வட்டிக்கு ஈடாக நாள்தோறும் வாழைப்பழம் வழங்கும் பொறுப்பு தஞ்சாவூரில் நான்கு குடியிருப்புகளில் வாழ்ந்த நகரத்தார்களிடம் (வியாபாரச் செட்டிகளிடம்) ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தஞ்சாவூர்ப் புறம்படி நித்த வினோதப் பெருந்தெருவில் நகரத்தார், மும்முடிச் சோழப் பெருந்தெருவில் நகரத்தார், வீர சிகாமணிப் பெருந்தெருவில் நகரத்தார்,திருபுவன மாதேவிப் பேரங்காடி நகரத்தார் ஆகியோர் ஆவர். மேற்குறித்த கல்வெட்டும் பிள்ளையார் வழிபாடு தமிழ்நாட்டில் வணிகச் சாதியினரால் வளர்க்கப்பட்டச் செய்தியினை உறுதிப்படுத்துகிறது.

நரசிம்மப் பல்லவனின் படைத் தளபதியான சிறுத்தொண்டர், வாதாபி நகரத்தில் இருந்து இவ்வழிபாட்டைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்த கதையினை முதலில் தொ.பொ.மீ யும் பின்னர் வீரபத்திரப்பிள்ளை போன்ற ஆய்வாளர்களும் குறிப்பிட்டாலும் வணிகச் சாதியினர் கடவுளாகவே தமிழ்நாட்டுக்குப் பிள்ளையார் வழிபாடு வந்தது என்று கொள்வதே பொருத்தமாகத் தோன்றுகிறது.

       ~அறியப்படாத தமிழகம்~
[தொ பரமசிவன், அறியப்படாத தமிழகம், பக்கங்கள் 75 – 77]

விநாயகர் கலவர அரசியல் – திலகர் உருவாக்கிய  வரலாறு :-

தனியார் கொண்டாட்டமாக இருந்த விநாயகர் வழிபாட்டை பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் 1893 ல், பாலகங்காதர திலகர் தான் மகாராட்டிரத்தில் பொது விழாவாக மாற்றினார். மும்பையின் பந்தல்களில் பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் மற்றும் விநாயகப் பெருமானைப் வைப்பதை அவர் ஊக்குவித்தார்.

மகாராட்டிரத்தில் பிளேக் நோய் பெரும் அளவில் வெடித்தபோது, ஆங்கிலேயர்கள் பிளேக் நோய்க்கு மூல காரணம் எலிகள் என்பதால், எலிகளை வேட்டையாட ஏற்பாடு செய்தார்கள்.

“எலி – விநாயகர் வாகனம் – கிறித்துவ – மிலேச்சர்களான வெள்ளைக்காரர்கள் நமது இந்து மதத்தில் மூக்கை நுழைக்கிறார்கள். இந்துக் கலாச்சாரத்தில் தலையிடுகிறார்கள்” என்று வெறியைக் பாலகங்காதர திலகர் கிளப்பினார். இதன் காரணமாக கலவரம் உருவாக்கப் பட்டது ; இரண்டு வெள்ளைக்கார அதிகாரிகளை மத வெறியர்கள் சுட்டுக் கொன்றார்கள். இந்த வழக்கில் திலகர் 18 மாதங்கள் சிறை செல்ல நேர்ந்தது.

தமிழ்நாட்டில் விநாயகர் வழிபாட்டு  கலவரங்கள் : திட்டமிட்டு ஆர்’எஸ்’எஸ் உருவாக்கியது!

தமிழ்நாட்டில், நீண்ட காலமாக 1980கள் வரை, மிகவும் பரவலாக பச்சைக் களிமண்ணால் உருவாக்கிய பொம்மைகள் வைத்து மக்கள் வீடுகளிலும், விநாயகர் கோயில்களிலும் சிறப்பு சடங்குகளுடன் கொண்டாடி வருகின்றனர். அதாவது,  19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது போல, பெரிய அளவிலான பொது விழாக்கள் மற்றும் ஊர்வலங்கள் தமிழ்நாட்டில் எதுவும் இல்லை.

1980 களில் தான், இந்து முன்னணியின் திட்டமிட்ட முன்னெடுப்பால், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி, பரந்த ‘இந்து ஒற்றுமையை’ உருவாக்குவதற்காக ,  உள்ளூர் மயமாக்கப்பட்ட பெருவிழாக்கள் ஆக்கின; பரிவாரத்தின் முதன்மையான குறிக்கோள், சாதிப் பிரிவினைகளைக் களைவதற்கானப் பணிகளை செய்வதற்கு  பதிலாக, அனைத்து இந்துக்களையும்,  ‘ஒற்றை – பெரும்பான்மையான சமூகத்தைச்’ சேர்ந்தவர்கள் என்ற உணர்வை ஏற்படுத்துவதே ஆகும்.

1983 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி நாளில் சென்னையில்  மேற்கு மாம்பலம் பகுதியில், ஒரு கோவிலுக்கு அருகில் உள்ள பொது இடத்தில், இந்து முன்னணி, ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம் (ஆர்’எஸ்’எஸ்) மற்றும் பாரதிய ஜனதா கட்சி (B’J’P) சேர்ந்த இந்துத்துவா சக்திகள் சிலர்  விநாயகரின் சிலையை நிறுவினார்கள். ஒரு சில சில நாட்களுக்குப் பிறகு, அவர்கள் அந்த சிலையை அருகிலுள்ள  ஒரு கோவில் குளத்தில் கரைப்பதற்கான  ஊர்வலம் நடத்தினார்கள்.

ஒரு வருடம் கழித்து, மீண்டும் பெரிய அளவில் விநாயகர் சிலைகள் நகரின் மையத்தில் இருந்த திருவல்லிக்கேணி துவங்கி பல்வேறு இடங்களிலும் அமைக்கப்பட்டன.  தொடக்கத்தில் சிறியளவு இருந்த விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்கள் மிக வேகமாக விரிவடைந்தன.  1990 இல், சென்னையில் ஆளுயர சிலைகள் உடன்ஆயிரக்கணக்கானோருடன் நடைபெற்ற ஊர்வலம்  திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் முஸ்லிம்கள் மசூதிக்கு அருகில் இரத்தக்களரி கலவரத்திற்கு வழிவகுத்தது.    முதலில்  சென்னையில் ஒரு பெரிய பொது விழாவாக உருவெடுத்த விநாயக சதுர்த்தி கொண்டாட்டம் 1980களின் பிற்பகுதியிலும் 1990களின் முற்பகுதியிலும் அதன்  தமிழ் முழுவதும் நகர்ப்புறம்,  கிராமப்புறங்களுக்கும் பரவியது. 1995 ஆம் ஆண்டு பண்டிகைக்கு முன்னர்,  இந்து முன்னனி தலைவர்,  “தமிழ்நாட்டின் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் விநாயகர் விசர்ஜனங்கள் நடக்கும் “ என அறைகூவல் விடுத்தார்.  இந்த அறைகூவல் நகர்ப்புறங்களில் தற்போது வெற்றி பெற்றுள்ளது; கிராமப்புறங்களிலும் வேகமாகப் பரவி வருகிறது.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பாக தலித் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின்  குடியிருப்புகளில் விநாயகர்  விழாவை துவக்குபவர்கள் இந்து முன்னணி – ஆர்’எஸ்’எஸ் – பி’ஜே’பி மற்றும் சங்க பரிவாரத்தின் பிற அமைப்புகளாகும். பிரமாண்டமான விநாயகர் சிலைகளை நிறுவுதல், உள்ளூர் மக்களுக்கு நிதியுதவி செய்தல் மற்றும் விநாயகர் சிலை கரைக்க கொண்டு செல்வது என்ற பெயரால்,  சிறுபான்மையினர் பகுதிகள் மற்றும் மசூதிகள் வழியாக வாகன ஊர்வலங்கள் நடத்தி கலவரங்களுக்கு திட்டமிடுவது  ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

🟥எச்சரிக்கை:

வீடுகளில் அமைதியான வழிபாட்டு கடவுளாக திகழ்ந்த  களிமண் கணேசர், தற்போது  மிகப்பெரிய பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் விநாயகராக மாற்றம் பெற்றுள்ளது வெறும் அளவு மாற்றம் மட்டுமே அல்ல! தற்போதைய பிரமாண்டமான  விநாயகர் சங்க’பரிவாரத்தின் வெறுப்பு – வன்முறை – மத கலவரங்கள் ஏற்படுத்தும் அரசியல் ஆயுதமாக பண்பு மாற்றம் பெற்றுள்ளார்.

🛑இந்து முன்னணி மூலமாக சங்கப் பரிவாரம் கட்டமைக்கும் மதவெறி கலவர அரசியலில் இருந்து தமிழ்நாட்டை காப்பது அனைவரின் கடமையாகும்🛑

26.8.25

அமல்ராஜ்

தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர்.

By TN NEWS