சென்னை மாநகருக்குள் நுழையக் கூடாது என பாஜக மாநில நிர்வாகியான நெடுங்குன்றம் சூர்யாவுக்கு விதிக்கப்பட்ட தடையை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
சென்னை மாநகருக்குள் நுழைய தடை விதித்து, பாஜக மாநில பட்டியல் அணி செயலாளர் நெடுங்குன்றம் சூர்யாவுக்கு மாநகர காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
பாஜக மாநில பட்டியல் அணி செயலாளர் நெடுங்குன்றம் சூர்யா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அவரை ஏன் சென்னைக்குள் நுழைய தடை விதிக்கக் கூடாது என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என கொளத்தூர் காவல் துணை ஆணையர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த நோட்டீஸுக்கு சூர்யா பதில் அளித்திருந்த நிலையில், ஏப்ரல் 25ஆம் தேதி முதல் ஓராண்டுக்கு சென்னை மாநகருக்குள் நுழையக் கூடாது என காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து நெடுங்குன்றம் சூர்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை அனுப்பிய நோட்டீசுக்கு உரிய விளக்கம் அளித்தும் அதை முறையாகப் பரிசீலிக்காமல் காவல் ஆணையர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகவும், எந்தவித காரணத்தையும் குறிப்பிடாமல் தன்னை சென்னைக்குள் நுழைய தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் நெடுங்குன்றம் சூர்யா தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, காவல் ஆணையரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
விக்னேஷ்வர்