*”விஏஓ வேலைக்கு சேர்ந்து நான்கே மாதம் தான் ஆகிறது.. பட்டா மாறுதலுக்கு ரூ.6 ஆரயிரம் கையூட்டுப் பெற்ற கிராம நிர்வாக அதிகாரியுடன் உதவியாளர் கைது!*
தமிழ்நாட்டில் அவ்வப்போது அரசு அலுவலகங்களில் அதிரடியாக சோதனை நடத்தி லஞ்சம் பெரும் அதிகாரிகளை கைது செய்து வருகிறது தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள். அந்த வகையில் கடலூரில் பணியில் சேர்ந்து நான்கே மாதங்களில் லஞ்சம் பெற்றதாக இளம் வயதான கிராம நிர்வாக அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவருக்கு உடந்தையாக இருந்த அவரது உதவியாளரும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் கையில் கைரேகை பதிந்த லஞ்ச பணத்துடன் சிக்கி கைதாகியிருக்கிறார்.
லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்து என தமிழ்நாட்டின் பல்வேறு அரசு அலுவலகங்களில் பதாகைகள் பார்த்தாலும், லஞ்சம் வாங்குவதும் லஞ்சம் கொடுப்பதும் சட்டப்படி குற்றம் என விதவிதமாய் போர்டுகள் வைத்தாலும் லஞ்சத்தை ஒழிக்க முடியவில்லை.
பிறப்பு முதல் இறப்பு வரை லஞ்சம் கொடுத்தால் தான் எதையுமே சாதிக்க முடியும் என்ற நிலை இருக்கிறது. தனியார் நிறுவனங்களைக் கூட தற்போது லஞ்சம் தலை தூக்கியுள்ளது தான் கொடுமையிலும் கொடுமை. குறிப்பாக அரசின் வருவாய் துறை உள்ளிட்ட துறைகளை லஞ்சம் தலைவிரித்து ஆடுவது குறிப்பிடத்தக்கது.
பிறப்பு, இறப்பு சான்றிதழ், வருவாய் சான்றிதழ், பட்டா மாறுதல் உள்ளிட்ட வருவாய் துறை சேவைகளை பெற ஆயிரக்கணக்கில் லஞ்சம் வாங்கப்படுகிறது/ இது குறித்து பல நேரங்களில் பொதுமக்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் ஒரு சில நேரங்களில் லஞ்சம் பெறும் அதிகாரிகள் கைது செய்யப்படுவதும் வாடிக்கையாக இருக்கிறது. அப்படித்தான் கடலூரில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதுவும் பணியில் சேர்ந்த நான்கே மாதங்களில் லஞ்சம் பெற்றதாக கிராம நிர்வாக அலுவலரும், அவரது உதவியாளரும் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.
பணத்திற்கு ஆசைப்பட்டு மிகவும் கடினமாக படித்து கஷ்டப்பட்டு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் குரூப் 4 தேர்வாணையம் மூலம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி வேலையை இழந்திருக்கிறார் அந்த இளைஞர். தன் மீதான குற்றச்சாட்டு பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் அவரால் பணியாற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் கைரேகை பதிந்த லஞ்சப் பணத்துடன் கையும், களவுமாக சிக்கியிருப்பதால் அவர் தப்பிப்பது கடினம் தான். கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பு அருகே வாக்கூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் சதீஷ்குமார் என்பவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இவர் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற அவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தான் பணியில் சேர்ந்து இருக்கிறார். அவருக்கு உதவியாளராக ரமேஷ் என்பவர் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த தேர்விஜயன் என்பவர் தனது தந்தையின் பெயரிலிருந்து தனது பெயருக்கு பட்டாவை மாற்றி தர வேண்டும் என முறையான ஆவணங்கள் அனைத்தும் வைத்து விண்ணப்பித்திருக்கிறார்.
பின்னர் இது குறித்து தேர்விஜயன் அனைத்து ஆவணங்களையும் கொண்டு பட்டாவிற்கு அப்ளை செய்த ஒப்புகை சீட்டுடன் வர்கூர் கிராம நிர்வாக அதிகாரியான சதீஷ்குமாரை சந்தித்து இது குறித்து கேட்டுள்ளார்
அவர் பட்டா மாறுதல் செய்ய வேண்டும் என்றால் ஆறாயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என சதீஷ்குமார் கறார் காட்டி இருக்கிறார்.
தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என மனுதாரராகிய தேர்விஜயன் எவ்வளவோ சொல்லியும் பணத்தை கொடுத்தால் தான் பட்டா மாறுதல் என கண்டிப்புடன் பேசியிருக்கிறார் அந்தக் கடமை தவறாத கிராம நிர்வாக அதிகாரி சதீஷ். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பின்னர் 6, ஆரயிம் ரூபாய் லஞ்சம் தருவதாக ஒப்புக் கொண்டதோடு, இது தொடர்பாக கடலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சத்யராஜிடம் புகார் செய்திருக்கிறார். சதீஷ்குமாரின் பின்னணி குறித்து விசாரித்த கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவர் லஞ்சம் கேட்டது உண்மைதான் என்பதை உறுதி செய்த பின்னர் ரசாயன பொடி தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை புகார்தாரரான தேர்விஜயிடம் கொடுத்து அனுப்பி லஞ்சம் கேட்டு கிராம நிர்வாக அதிகாரியிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து லஞ்சப் பணத்தை தனது உதவியாளர் ரமேஷ் மூலம் சதீஷ்குமார் வாங்கிய போது மறைந்திருந்த கடலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் சத்யராஜ் தலைமையிலான காவல் ஆய்வாளர்கள் அன்பழகன், திருவேங்கடம், சுந்தர் ஆகியோர் கொண்ட போலீசார் இருவரையும் கையும், களவுமாக பிடித்தனர். உடனடியாக ரசாயனம் கொண்டு அவர் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. அதை புகைப்படம் வீடியோ ஆதாரங்களாக எடுத்துக் கொண்ட போலீசார் அலுவலகத்திலிருந்த ஆவணங்களை சோதனை செய்தனர். தொடர்ந்து இருவரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்து இருவரையும் அரசு மருத்துவமனைக்கு கூப்பிட்டு சென்று மருத்துவர்களின் பரிசோதனைக்கு பின் மருத்துவரின் மருத்துவ பரிசோதனை சீட்டைப் பெற்ற ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிபதியின் உத்தரவின் பேரில் கடலூர் மத்திய சிறையில் தள்ளினர்.
செய்திகள்: ராமர் – திருச்சி