தென்காசி, ஆகஸ்ட் 17:
தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரையில் உள்ள சூர்யகாந்தி தோட்டம், சமீபகாலமாக சுற்றுலாப் பயணிகளின் முக்கிய ஈர்ப்பு மையமாக மாறியுள்ளது. கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் தினந்தோறும் நூற்றுக்கணக்கில் இங்கு வந்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
ஆனால், இந்த அழகிய தோட்டம் இன்று சர்ச்சைக்குரியதாக மாறியது.
ரூ.50 வசூல் குற்றச்சாட்டு:
இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்த நிலையில், தோட்டத்திற்குள் புகைப்படம் எடுக்க விரும்பியவர்களிடம் “ஒருவருக்கு ரூ.50 கட்டணம்” என்ற பெயரில் வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய சாலையில் வாகனங்கள் நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஆம்புலன்ஸ் டிரைவருக்கு தடை:
அப்பகுதியில் வசிக்கும் ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பைக்கில் வந்தபோது, “நான் உள்ளூர்” எனக் கூறி கட்டணத்தை செலுத்தாமல் உள்ளே செல்வதற்கு முயன்றுள்ளார்.
அதற்கு, தோட்ட உரிமையாளர் முருகன் என்பவரின் மகன் முப்புடாதி –
“உள்ளூர்காரராக இருந்தாலும் பணம் கட்டியே ஆக வேண்டும், இல்லையேல் வாகனத்தை அப்புறப்படுத்து” எனக் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆம்புலன்ஸ் டிரைவர், “இது சட்டவிரோதம்; காவல் நிலையத்தில் புகார் தருவேன்” என எதிர்த்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
காவல்துறை பெயர் கூறி மிரட்டல்
புகாரின்படி, முப்புடாதி தனது செயலுக்கு ஆதரவாக “உதவி ஆய்வாளர் கார்த்திக்கின் அறிவுறுத்தலால்தான் நான் பணம் வசூலிக்கிறேன்” எனக் கூறியதாக தெரிகிறது.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு அதிகரித்தது.
காவல்துறையின் நேரடி விசாரணை
உடனே சம்பவ இடத்திற்கு சாம்பவர்வடகரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திக் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
அப்போது முப்புடாதி ,
“ஆம், நான்தான் ரூ.50 வசூல் செய்தேன். என் தோட்டத்தில் நுழைவதற்கு எனக்கு உரிமை உண்டு. யார் வந்தாலும் கட்டணம் செலுத்த வேண்டும்” என்று அதிகாரத்தோடு கூறியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, காவல்துறையின் பெயரை சொல்லி பணம் வசூல் செய்தது உறுதியானதாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பொதுமக்களின் அதிருப்தி:
சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள்:
“இந்த வகை வசூல் சட்ட விரோதம்.
காவல்துறையின் பெயர் கூறி பொதுமக்களை மிரட்டுவது கடுமையான குற்றம்.
இதனால் போக்குவரத்து நெரிசல், விபத்து அபாயம் அதிகமாகிறது” என கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், முப்புடாதி மீது உடனடி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரளா சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அப்பகுதி மக்கள் கோரிக்கை
“சூர்யகாந்தி தோட்டம் அழகான சுற்றுலா மையமாக இருந்தாலும், சட்டவிரோத வசூல் காரணமாக அது களங்கம் அடைகிறது. அரசு மற்றும் காவல்துறை தலையிட்டு இதுபோன்ற தனியார் வசூல்களை முற்றிலும் நிறுத்த வேண்டும்” என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அமல்ராஜ்,
மாவட்ட தலைமை நிருபர், தென்காசி